Saturday, May 4, 2024




Homeதமிழ்நாடுபிரதமரின் சூரியவீடு திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

பிரதமரின் சூரியவீடு திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை: சூரியசக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற பசுமை எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்ய மாநில அரசுகளை, மத்தியஅரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ‘பிரதமரின் சூரியவீடு இலவச மின்சாரம்’ (சூர்யகர் முப்தி பிஜிலி யோஜனா) என்ற திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச சூரியசக்தி மின்சாரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. ரூ.75 ஆயிரம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் இத்திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின்கீழ், அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு சூரியசக்தி மின்இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், இதுவரை40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இதில் 5 சதவீதம்பேருக்கு மட்டுமே சூரியசக்தி மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சூரியசக்தி மின்உற்பத்திக்கான சோலார் தகடுகள் (பேனல்) விற்பனை செய்யும் 100-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் சென்னை, கோவையில் மட்டுமேஉள்ளனர். இதனால், பிற மாவட்டங்களில் இணைப்பு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும்வகையில், அனைத்து மாவட்டங்களிலும் சோலார் தகடு விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இத்திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குள் மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் சூரியசக்தி மின்இணைப்புகள் வழங்கும் பணியில் தமிழகத்தில் சுணக்கம்ஏற்பட்டது’’ என்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments